இலங்கையில் செயற்கை மழையைப் பொழிவிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை ஆராய்வதற்கென விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இந்த குழுவில் விமானப்படை, மின்சார சபை என்பனவற்றின் பிரதிநிதிகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
நீரேந்துப் பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குறைவடையும் போது, இந்த முறைமையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் செயற்கை மழையை பெய்ய வைப்பதற்கென நான்கு படிமுறைகள் பின்பற்றப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளமை தெரிந்ததே. அதன்படி குறித்த படிமுறையினை இங்கு காணலாம்.
1.இலங்கை வான்படையின் ராடார்களின் உதவியுடன் வரட்சி நிலவும் பகுதிகளில் உள்ள மழைக்குச் சாத்தியமான முகில்களை இனங்காண்பது.
2.அந்த இடங்களில் இலங்கை விமானப்படையினர் தமது சிறிய ரக விமானங்களில் பறந்து சில்வர் அயோடைட், அம்மோனியம் நைட்ரைட் மற்றும் கல்சியம் குளோரைட் போன்ற இரசாயனங்களை வெளிவிடுவார்கள்.
3.இந்த இரசாயனங்கள் முகில்களுடன் தாக்கம் புரிந்து பனித்துகள்கள் உருவாவதற்கு உதவுகின்றன.
4.இந்த பனித்துகள்கள் கனமாவதால் அவற்றால் முகிலிடைவெளியில் தங்கிநிற்பது சாத்தியமற்ற ஒன்றாகிறது. இதனால் அவை பூமியை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. பூமியை நோக்கி வரும் வழியில் நீராக கரைந்து மழையாக உருவாகி மண்ணில் பொழிகின்றன.
இந்த நான்கு படிமுறைகளின் அடிப்படையில் இலங்கையில் கடுமையான வரட்சி நிலவும் பிரதேசங்களில் இனிமேல் மழையைப் பெய்விக்கமுடியும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment