Breaking

Friday, January 18, 2019

மொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறையினால் அரச சேவையில் ஏற்படும் தாக்கங்கள்


இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதாவது நான்கு மதங்களையும் மூன்று இனங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் இந்நாட்டில் இரண்டு மொழிகள் தான் தாய்மொழிகளாக உள்ளன. சிங்களமும், தமிழும் தான் அம்மொழிகளாகும். இவற்றில் சுமார் 16.6 மில்லியன் மக்கள் சிங்கள மொழியையும், சுமார் 4.7 மில்லியன் மக்கள் தமிழ் மொழியையும் பேசக்கூடியவர்களாக விளங்குகின்றனர். இதன்படி இந்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாக சிங்களமும், அதற்கு அடுத்த இடத்தில் தமிழ் மொழியும் காணப்படுகின்றது.
ஆனால் இந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்த ஐரோப்பியர் உள்நாட்டு மக்களின் தாய்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, அவர்களது ஆங்கில மொழியில் உள்நாட்டு மக்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளவும் அந்த மொழியில் உள்நாட்டு மக்கள் தொடர்பாடல்களை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் வகையில் செயற்பட்டனர்.
இதன் விளைவாக இன, மத பேதங்களுக்கு அப்பால் எல்லா மக்களும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற இந்நாட்டில் தமிழையும், சிங்களத்தையும் தாய்மொழிகளாகக் கொண்ட மக்கள் மத்தியிலான தொடர்பாடலுக்குரிய இணைப்பு மொழியாக ஆங்கிலம் மாறியது. அதாவது ஒரு தாய்வயிற்றில் பிறந்த பிள்ளைகள் மத்தியில் இரண்டு தாய்மொழிகள் காணப்பட்ட போதிலும் அவர்களுக்கிடையிலான தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தோற்றம் பெற்றது.
ஆனால் உள்நாட்டு மக்களுக்கு அவர்களது தாய்மொழிக்கு மேலதிகமாக அவர்களது அயலவரது தாய்மொழியின் சிறப்பும் முக்கியத்துவமும் உரிய ஒழுங்கில் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்தால் அவர்கள் ஆரம்பத்திலேயே அயலவரின் மொழியிலும் பரீட்சயம் பெற்றிருப்பர். அதன் மூலம் சுதந்திரத்திற்கு பின்னர் மொழியை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
ஆனால் இன, மத ரீதியிலான பல்வகைமை இந்நாட்டில் சிறப்பாகக் காணப்படுகின்ற போதிலும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற முரண்பாட்டின் ஊடாக பல்வேறுவிதமான துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு இந்நாடு முகம் கொடுத்துள்ளது. அவை இந்நாட்டின் கரைபடிந்த வரலாறாகவே பதிவாகி இருக்கின்றது.
சுதந்திரத்தின் பின்னர் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமான முரண்பாடு 1980 களாகும் போது ஆயுத மோதலாக உருவெடுத்து சுமார் 30 வருடகால உள்நாட்டு யுத்தமாக நீடித்தது. அவற்றின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புக்களும் இழப்புக்களும் கொஞ்சநஞ்சமல்ல.
மொழியின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் உரிய ஒழுங்கில் அறிந்து புரிந்து கொண்டிருந்தால் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஒரு போதும் இந்நாடு முகம் கொடுத்திருக்காது. இருப்பினும் அவற்றில் ஏற்பட்ட பின்னடைவே இந்த உள்நாட்டு யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
ஆனாலும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற பிரச்சினைகளைக் களைந்து மக்கள் மத்தியில் சகவாழ்வு நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் சிங்களமும், தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளை நடைமுறைப்படுத்தும் வகையில் பரந்தடிப்படையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் கூட அடங்கும்.
இருந்த போதிலும் இந்நாட்டு மக்கள் மத்தியில் அவர்களது உத்தியோகபூர்வ மொழிகள் தொடர்பில் இன்னும் போதிய அறிவு, தெளிவு ஏற்பட்டிருப்பதாக இல்லை. அதன் விளைவாக மொழி பெயர்ப்பாளர்களின் தேவை பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. அது எந்தளவுக்கென்றால் அரசாங்கத்தின் பணிகள் தாமதமடைவதற்கு கூட அது வழிவகுத்துள்ளது. இது எல்லா மட்டங்களிலும் உணரப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதாவது 'மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை காரணமாக அரசாங்க ஆவணங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதில் பெரும் காலதாமதம் நிலவுகின்றது. இதன் விளைவாக அரச பணிகள் பெரிதும் தாமதமடைகின்றன. இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேநேரம் தமிழ்மொழியிலுள்ள ஆவணங்களை சிங்கள மொழிக்கும், சிங்கள மொழியிலுள்ள ஆவணங்களை தமிழ்மொழிக்கும் மொழிபெயர்ப்பதில் அதிக காலதாமதம் ஏற்படுவதாகவும் இக்கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ், சிங்கள மொழிகள் தொடர்பான அறிவு, தெளிவில் காணப்படும் பின்னடைவு, அரசாங்க சேவையில் கூட தாக்கம் செலுத்தி வருவதோடு சேவைகளைத் தாமதப்படுத்தவும் பங்களிக்கின்றது என்பது தெளிவாகின்றது.
மொழி என்பது ஆளுக்கு ஆள் தொடர்பு கொள்வதற்கான ஊடகமே. அதன் முக்கியத்துவமும் சிறப்பும் உரிய ஒழுங்கில் அறிந்து தெரிந்து கொள்ளப்படும் போது அது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியதாகவே அமையும். குறிப்பாக ஒவ்வொருவரும் தம் தாய்மொழியுடன் சேர்த்து தம் அயலவரின் மொழியையும் அறிந்து தெரிந்து கொள்ளும் போது அது சக வாழ்வுக்கும், நல்லிணக்கத்திற்கும் பக்க துணையாகவே இருக்கும்.
நன்றி - தினகரன் 

No comments:

Post a Comment