இலங்கையின் கிராமப்புறங்களில் அரசாங்கப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையின் விளைவாக கல்வி நடவடிக்கைகள் சீர்குலையப்போவதாக கல்வித்துறைத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றன.
கடந்த வாரம் வடமத்திய மாகாணம், வடமாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக்கோரி மாணவர்களின் பெற்றோர்களினால் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதற்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது.
வடமத்திய மாகாணத்தில் சுமார் 16,200 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோதிலும், தற்போது 14,600 ஆசிரியர்களே பணியாற்றுகின்றனர்.பாடசாலைகளில் 1,600 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அந்த மாகாணத்துக்கான செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருந்து வருடாந்தம் சுமார் 400 ஆசிரியர்கள் பயிற்சி முடிந்து வெளியேறுகின்றபோதிலும், வடமத்திய மாகாணத்துக்கு ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்தும் வருடாந்தம் 1,350 டிப்ளோமா ஆசிரியர்கள் சித்தியடைந்து வெளியேறுகிறார்கள்.ஆனால், கிராமப்புற பாடசாலைகளுக்கு ஒருவர்தானும் நியமிக்கப்படவில்லை.விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும் ஆரம்பப் பாடசாலைகளுக்கும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் பெர்னாண்டோ கூறினார்.
1989 - 90 காலகட்டத்தில் கிராமப்புறப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் 60 வயதைப் பூர்த்திசெய்து ஓய்வுபெறப்போகின்றார்கள்.அதனால் 2020 அளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மூன்று மடங்காகும்.வடமத்திய மாகாணத்தில் இவ்வருடம் 1,000 ஆசிரியர்கள் ஒய்வுபெறுகின்றார்கள்.அதேவேளை, தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான புதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டிய கடும் தேவை இருக்கிறது என்று தெரியவருகிறது.
ஆசிரியர்களை நேரகாலத்தோடு இடமாற்றம் செய்வதில் இடமாற்ற சபைக்கு இருக்கின்ற செயற்திறனின்மையே பிரச்சினைக்கு காரணமாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இடமாற்ற சபையின் 2007/20 கொள்கைக்கு இசைவான முறையில் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தால், கிராமப்புறப் பாடசாலைகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கை ஒவ்வொரு 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரைக்கொண்டிருக்கின்ற அதேவேளை, மேல்மாகாணத்தில் ஒவ்வொரு 17 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் இருக்கிறார்.நாடளாவியரீதியில் ஆசிரியர்கள் தொகை 241,523 ஆக இருக்கிறது.
இடமாற்ற சபையின் கொள்கையின்படி ஒரு பாடசாலையில் 5 வருடங்கள் பணியாற்றிய ஒரு ஆசிரியர் வேறு பாடசாலைக்கு மாற்றஞசெய்யப்படவேண்டும். ஆனால், தற்காலிக ஏற்பாடாகச் செய்யப்பட்ட இடமாற்றங்கள் பிரபலமான பாடசாலைகளிலும் தேசிய பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் கூடுதலாகக் குவிக்கப்படுவதற்கு வழிவகுத்துவிட்டது.இதனால், கிராமப்புறப்பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பாடசாலைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
பல ஆசிரியர்கள் பிரபல பாடசாலைகளிலும் தேசிய பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் கூடுதலாக பணியாற்றுகிறார்கள். தங்கள் பகுதிகளின் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் சில ஆசிரியர்கள் தங்களது பதவிக்காலம் முழுவதுமே ஒரே பாடசாலையில் பணியாற்றுகிறார்கள்.இதன் விளைவாக நாட்டில் உள்ள தேசியப் பாடசாலைகளிலும் கிராமப்புறப் பாடசாலைகளிலும் பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்றும் ஜோசப் ஸ்ராலின் கூறினார்.

No comments:
Post a Comment