ஸ்ரீலங்காவில் மூன்று இலட்சம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான தேவை காணப்படும் நிலையில் ஒரு இலட்சம் பேர் மாத்திரமே உள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவர்களை உருவாக்குவதற்கான நவீன கல்வி முறைமைகள் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான கல்வி முறைமையில் இருந்து விடுபட்டு, நவீன யுகத்திற்கு ஏற்றவகையில் கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பை அண்மித்த, களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயரின் காலத்தில் எமது மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்கு பயிற்றுவிக்கும் பாடசாலை கல்வி முறைமையே ஸ்ரீலங்காவில் காணப்படுகின்றது. எனினும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இன்று சமூகத்திற்குத் தேவையான நற்பிரஜைகளை உருவாக்குவதற்கான கல்வி முறைமையே பின்பற்றப்படுகின்றது. அந்த கல்வி புரட்சியின் ஆரம்பமே இது. 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி அவசியம் தொடர்பில் இன்று உணரப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஏதாவது ஒரு கல்வி அறிவினை புகட்டுவதே எமது நோக்கம். தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் அல்லது தொழிநுட்பவியலாளர்கள் மூன்று இலட்சம் பேர் அவசியம். எனினும் ஒரு இலட்சம் பேர் மாத்திரமே இருக்கின்றனர். இன்னும் இரண்டு இலட்சம் பேர் காணப்படுவார்களாயின் எமது கடனை மீளச் செலுத்துவது இலகுவானதாக இருக்கும். அவர்கள் இருக்கும் பட்சத்தில் 3000 மில்லியன்களை மேலதிகமாக உழைக்க முடியும். அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய வல்லுனர்கள் காணப்படும் பட்சத்தில், உற்பத்தி அதிகரிக்கும், விலைகள் குறையும், போட்டித் தன்மை அதிகரிக்கும்.
ஸ்ரீலங்காவின் கல்வித்துறையில் நவீன பாடவிதானங்களை உட்புகுத்தி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை தயார்படுத்தும் செயற்றிட்டங்களை ஸ்ரீலங்கா அரசு ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகச்சிறந்த கல்வித் திட்டம் பின்லாந்தில் காணப்படுகின்றது. அந்த நாட்டில் 13 வயதுடைய அனைவருக்கும் கல்வி புகட்டப்படுகின்றது. அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை என்பது அவர்களது கொள்கை. இதனையே எமது கல்வி அமைச்சும் ஆரம்பித்துள்ளது. இதற்கென நாம் 800 பாடசாலைகளை தெரிவு செய்துள்ளோம். விசேடமாக தொழில்நுட்பம் மற்றும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய பாடவிதானங்களை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அது எமது கடமை. நாட்டில் விரிவான அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி காணப்படும் நிலையிலேயே அது சாத்தியம். நாட்டின் முதலாவது ஸ்மார்ட் பாடசாலை குருநாகலில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தது கண்டியில் இன்னும் மூன்று கொழும்பில். இது ஆரம்பம் மாத்திரமே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment